கறவை மாடு வளர்ப்பில் இனப்பெருக்க மேலாண்மை

கறவை மாடு வளர்ப்பு இலாபகரமான தொழிலாக இருக்க வேண்டுமெனில் அவற்றின் பால் உற்பத்தி சீராக இருப்பது அவசியமாகும். மாட்டின் பால் உற்பத்தியைப் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அவற்றின் மிக முக்கியமான காரணி மாட்டின் இனப்பெருக்கத் திறனாகும்.


மாட்டின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் பொழுது அவற்றின் பால் உற்பத்தியும் பாதிக்கப்படும். எனவே கறவைமாட்டின் முறையான நவீன இனப்பெருக்க உத்திகளை அறிந்து அவற்றைப் பின்பற்றுவது அவசியமாகும்.


கிடேரிக்கன்றுகள் பருவமடைதல்:


பொதுவாக நல்ல முறையில் பராமரிக் கப்படும் கலப்பின கிடேரிகள் 18 மாத வயதில் 1 1/2 வயதில்) பருவமடையும். எருமைக் கிடேரிகள் 2 முதல் 2 1/2 ஆண்டு வயதில் பருவத்திற்கு வரும். இந்த வயதில் கிடேரிகள் பருவமடைய வேண்டுமெனில் கன்று பிறந்த திலிருந்து சரியான அளவில் தீவனம், கர் குடற்புழு நீக்கம், தேவையான தடுப் பூசிகள் அளிப்பது போன்ற பராமரிப்பு முறைகளை தவறாது கடைப்பிடிப்பது அவசியமாகும்.


இந்த பராமரிப்பு முறைகள் கடைப் பிடிக்கப்படும் கிடேரிக்கன்றுகள் விரைவிலேயே உடல் வளர்ச்சி பெற்று பருவ மடையத் தயாராகும். கிடேரிக் கன்றுகள் பருவமடைவதற்கு வயதைக் காட்டிலும் உடல் எடை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அவற்றின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துப் பராமரிப்பு முறைகளையும் கையாள வேண்டும்.


கருவூட்டல் செய்தல்


பருவம் அடைந்த கிடேரிகள் மற்றும் மாடுகளின் சினைப்பருவத்தைக் கண்டறிந்து சரியான நேரத்தில் கருவூட்டல் செய்வது மிகவும் அவசியமாகும். மாடுகள் பொதுவாக 18 முதல் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைபருவத்திற்கு வரும். சினைப்பருவத்தில் உள்ள மாடுகள் அடிக்கடி கத்துதல், மற்ற மாடுகள் மீது தாவுதல், பிறப்புறுப்பிலிருந்து கண்ணாடி போன்ற திரவம் வெளிப்படுவது. கறவை மாடுகளில் பால் அளவு குறைவது போன்ற அறிகுறிகளைக் காட்டும்.


சில மாடுகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும். சினை பருவத்தில் உள்ள மாடுகள் சினைப் பருவ அறிகுறிகள் தோன்றிய 12 மணி நேரத் திற்குள் கருவூட்டல் செய்ய வேண்டும். அதாவது சினைப்பருவ அறிகுறிகள் காலையில் தோன்றினால் அன்று மாலை யிலும், மாலையில் தோன்றினால் மறுநாள் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும்.


சினைப்பருவ அறிகுறிகள் அனைத்து மாடுகளிலும் முழுமையாக வெளிப்படாது. சில மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிக்காட்டாமல் சினைப் பருவத்தில் 3 இருக்கும். இதற்கு ஊமை சினைப்பருவம் என்று பெயர். இம்மாதிரியான மாடுகளில் சினைப்பருவத்தைக் கண்டறிவது கடினம்.


இப்பிரச்சனையை சரி செய்ய தற்பொழுது சினைப்பருவத்தைத் தூண்டுதல் அல்லது சினைப்பருவ ஒருங்கிணைப்பு என்ற முறை பின்பற்றப்படுகிறது. இம்முறையில் கணநீர் மருந்துகளை ஊசி மூலம் அல்லது பிறப்பு றுப்பினுள் செலுத்தப்படும் கருவி மூலம் மாட்டினுள் செலுத்தினால் குறிப்பிட்ட நாட்களில் மாடுகள் சினைப்பருவத்திற்கு வரும். இச்சமயத்தில் எவ்வித சிரமமின்றிச் சினைப்பருவத்தில் உள்ள மாடுகளுக்குக் கருவூட்டல் செய்யலாம்.


 


 


பொதுவாக மாடுகள் காலை மற்றும் மாலை வேளைகளில் தான் சினைப்பருவத்திற்கு வரும். ஆகவே கறவைமாடு வளர்ப்போர் தினமும் காலை மாலை வேளைகளில் மாடு களைக் கவனித்து வரவேண்டும். கருவூட்டல் செய்த சில மாடுகள் மறுநாளும் தொடர்ந்து சினைப் பருவத்தில் இருக்கும். இம்மாடுகளை அடுத்த நாளும் மீண்டும் கருவூட்டல் செய்யலாம்.


கருவூட்டல் செய்யப்பட்ட மாடுகள் சினையாக வில்லை யெனில் அடுத்த 18 முதல் 21 நாட்களில் மீண்டும் சினைப் பருவத்திற்கு வரும். இம் மாடு களை இந்த நாட்களில் கவனித்து மீண்டும் கருவூட்டல் செய்ய வேண்டும்.


இவ்வாறு சினைப் பருவத்திற்கு வராத பட்சத்தில் கருவூட்டல் செய்யப்பட்ட 60 நாட்களில் சினைப் பரிசோதனை செய்து சோதனை செயது சினையை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறில்லாமல் கருவூட்டல் செய்யப்பட்ட மாடுகள் சினைப்பருவத்திற்கு வரவில்லை யெனில் மாடுகள் சினையாகிவிட்டன என நினைக்கக் கூடாது.


ஏனெனில் சில மாடுகள் சினையாகாமலும் அதேசமயம் சினைப்பருவத் திற்கு வராமலும் இருக்க வாய்ப்புள்ளது. சினை மாடுகளை 60 நாட்களில் சினைப் பரி சோதனை செய்வதால் கருவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.


சினைமாடுகள் பராமரிப்பு:


சினைமாடுகளை முறையாக பராமரிப்பதன் மூலம் நல்ல தரமான கன்றை ஈன்றெடுக்கச் செய்வதுடன் பால் உற்பத்தியும் தொடர்ந்து சீராக இருக்கும். பொதுவாக பசு மாடுகளின் சினைக்காலம் 270 முதல் 280 நாட்களாகும். எருமை மாடுகளின் சினைக்காலம் 300- முதல் 310 நாட்களாகும். சினைமாடுகளில் கடைசி மூன்று மாதங்களில்தான் கன்று வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும்.


கன்று வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதற்கு மாட்டின் தீவனத்தை இம்மாதங்களில் அதிகப்படுத்திக்கொடுக்க வேண்டும். மாட்டின் 7 மாத சினைக்குப் பின்பு ஒரு கிலோ அடர்தீவனம் கன்றின் வளர்ச்சிக்கு பிரத்யேகமாக கொடுக்கப்படவேண்டும்.


அதேசமயத்தில் மாடுகள் பால் கொடுத்துக் கொண்டிருந்தால் 7 மாத சினைக்குப் பின்ப பால் கறவையைப் படிப்படியாக குறைந்துப் பின்பு நிறுத்திவிட வேண்டும். இவ்வாறு பால் கறவையை நிறுத்துவதால் கன்று நன்கு வளர்ச்சி பெறுவதுடன் அடுத்த ஈற்றிலும் பால் குறையாமல் இருக்கும்.


மேலும் சில சினை மாடுகளில் தோன்றும் சிலபி சில பிரச்சனைகள் கன்று வளர்ச்சி மற்றும் மாட்டிற்கே ஆபத்தை உண்டாக்கலாம். இவற்றை உரிய முறையில் கண்டறிந்து சரி செய்வதன் மூலம் இந்தப் பாதிப்பைத் தவிர்க்கலாம். பொதுவாக சினை மாடுகளில் கருப்பை வாய் வெளித்தள்ளுதல், கருப்பை முறுக்கம், கருச்சிதைவு போன்ற பிரச்சனைகள் தோன்றும்.


அதிக கன்று ஈன்ற மற்றும் உடல் மெலிந்த மாடுகள் அல்லது கருப்பை தசை நார்கள் அதிகம் தளர்ந்த மாடுகளில் கருப்பை வாய் வெளித்தள்ளுதல் ஏற்படும். இதனை சில பகுதிகளில் அறை வெளித்தள்ளுதல் அல்லது அடிக்காணுதல் என்று அழைப்பார்கள். இப்பிரச்சனை உள்ள மாடுகளை ஆரம்ப கட்டத்திலேயே கால்நடை மருத்துவரைக் கொண்டு பரிசோதித்து உரிய சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் பாதிப்பைத் தவிர்க்கலாம்.


மாடுகளில் கருச்சிதைவு நோய்க்கிருமிகள் பாதிப்பு, கணநீர் பற்றாக்குறை போன்ற மேலும் சில காரணங்களால் ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்க மாடுகளுக்குக் கோமாரி நோய்த் தடுப்பூசி மற்றும் கன்று வீச்சு நோய் தடுப்பூசிகளை உரிய இடைவெளியில் அளிக்க வேண்டும். சில மாடுகளில் கருப்பை முறுக்கம் சினையின் 6 மாதத்திற்குப்பின்பு எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம்.


கருப்பை முறுக்கம் ஏற்பட்ட மாடுகள் தீவனம் எடுக்காமல் அடிக்கடி படுத்து எழுந்திருக்கும். வயிற்றை உதைத்துக் கொள்ளும். இம்மாதிரியான மாடுகளைத் தாமதிக்காமல் கால் நடை மருத்துவரைக் கொண்டு சிகிச்சை செய்வது அவசியம்.


கறவை மாடுகள் வளர்ப்போர் கன்று ஈனும் அறிகுறிகளை தெரிந்திருப்பது அவசியமாகும். கன்று ஈனப்போகும் மாடுகள் தீவனம் எடுக்காது. தரையில் படுத்துப் படுத்து எழுந்திருக்கும். இனப்பெருக்க உறுப்பு தளர்ந்து காணப்படும். குறிப்பாக இடுப்பில் உள்ள தசை நார்கள் தளர்ந்து வால் பகுதியில் பள்ளம் ஏற்படும். மடி பெருத்துப் பால் சுரக்க ஆரம்பிக்கும்.


பின்பு மாட்டின் பனிக்குடம் வெளிவந்து கன்று வெளியேரும். மாடுகளில் பனிக்குடம் சார் வெளியே தெரிந்து 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மாடு தானாகக்கன்று ஈன வில்லை யென்றால் கால்நடை மருத்துவரைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும். பொது வாகக் கன்று ஈன்ற 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி விழுந்துவிடும்.


அவ்வாறு விழவில்லையென்றால் நஞ்சுக் கொடியை இழுப்பதோ அல்லது கல்லைக் கட்டி விடுவதோ கூடாது. கால் நடை மருத்துவரைக் கொண்டு உரிய முறையில் பிரித்தெடுக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு எடுக்க முடியாத மாடுகளில் உரிய சிகிச்சை செய்வதன் மூலம் அதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும்.


கன்று ஈன்ற பின்பு கடைப்பிடிக்க வேண்டிய பராமரிப்பு முறைகள்


பொதுவாக மாடுகள் கன்று ஈன்ற பின்பு அதன் கர்ப்பப்பை சுருங்கி முழுவதும் பழைய நிலைக்கு வருவதற்கு 60 நாட்கள் ஆகும். 60 நாட்கள் கழித்து சினைப் பருவத்திற்கு வரும் மாடுகளை கருவூட்டல் செய்ய வேண்டும். இதனால் கன்று ஈன்ற 3 மாதங்களுக்குள் மாடுகள் சினையாகி விடும். இவ்வாறு செய்வதால் மாட்டை ஆண்டுக்கு ஒரு கன்று ஈனச்செய்யலாம்.


இதனால் மாடுகள் ஆண்டுக்கு 10 மாதங் களில் கறவையில் இருக்கும். பால் உற்பத்தி சீராக இருப்பதற்கு மாடுகள் கன்று ஈன்ற 3 மாதங்களுக்குள் சினைப்படுத்துவது கறவை மாடு வளர்ப்போர் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு முக்கியமான பராமரிப்பு முறையாகும்.


3 மாதம் கழித்துச் சினைப்பருவத்திற்கு வராத மாடுகளை கால்நடை மருத்துவரிடம் கொண்டு பரிசோதித்து சினைப் பருவத்திற்கு வரச்செய்து கருவூட்டல் செய்யலாம்.


ஆகவே கறவை மாடு வளர்ப்போர் நாம் இங்கே குறிப்பிட்ட இனப்பெருக்க பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் கறவை மாடுகளின் பால் உற்பத்தியைத் தொடர்ந்து சீராக வைத்திருப்பதோடு பால் உற்பத்தியை பெருக்கி கறவை மாடு வளர்ப்பைத் தொடர்ந்து இலாபகரமாக நட நடத்தலாம்.


                                                                          - த. கீதா, பா.டெனீசிங்ஞானராஜ், ச.மனோகரன் மற்றும் ச. ஜெயசந்திரன் காங்கயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம், சத்தியமங்கலம்-638 402. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம். வேப்பேரி, சென்னை