இன்றைய நிலையில் வெங்காய விலை த'மற்றும் விற்பனை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் வெங்காயத்தில் ஈ தாக்குதலால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அதைத் தடுக்க என்னென்ன செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
டேலியா ஆண்டிகுவா என்னும் அறிவியல் பெயர் கொண்ட வெங்காய ஈ உருவத்தில் வீட்டு ஈ போல இருக்கும். இவை தனது முட்டைகளை இலைகள், குமிழங்கள் அல்லது குமிழத்திற்கு அருகில் இருக்கும் மண் மீது இடும். இவை 3 முதல் 8 நாள்களில் பொரித்து புழுவாக வெளிவரும்.
இவற்றிற்கு கால்கள் கிடையாது. புழுக்கள் வேர் பாகத்திலிருந்து குமிழங்களைக் குடைந்து தாள் பாகம் வரை பாதிப்படையச் செய்யும். பாதிப்பிற்குள்ளான வெங்காயத் தாள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இவற்றை பிடுங்கிப் பார்த்தால் குமிழங்கள் அழுகிக் காணப்படும்.
புழுக்கள் கூட்டமாக இருக்கும். பொதுவாக இதன் பாதிப்புகள் வெங்காயம் உருவாகும் தருணத்தில் அதிகமாக காணப்படும்.
பாதிப்பிற்குள்ளான வெங்காய குமிழங்களில் துளைகள் ஏற்படுத்தி விடுவதால் குமிழங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடும். இப்புழுக்கள் அடுத்தடுத்த குமிழங்களைத் தாக்குவதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்.
இவற்றை கட்டுப்படுத்த வயலைத் தொடர்ந்து கண்காணித்து பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி எறிந்து விட வேண்டும். புழுக்களால் ஏற்படும் காயம் காரணமாக பாக்டீரியா தாக்குதலுக்குள்ளாகி குமிழங்கள் அழுகிவிடும். இவ்வகை ஈக்கள் மஞ்சள் நிறத்தால் ஈர்க்கப்படும் தன்மை கொண்டது என்பதால் இவற்றை கவர்ந்து அழிக்க மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி ஏக்கருக்கு 10 வைக்கலாம்.
ஒவ்வொரு அறுவடைக்குப்பிறகும் பயிரின் எஞ்சிய பாகங்கள் அனைத்தையும் வயலைவிட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
தொடர்ந்து வெங்காயம் பயிரிடுவதைத் தவிர்த்து மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய வேண்டும். குளிர்ச்சியான, ஈரப்பதமான சூழல் புழுக்கள் உற்பத்திக்கு சாதகமாகவும், வெப்பமான வறண்ட சூழல் பாதகமாகவும் இருக்கும். அடிஉயரமாக வேப்பம்புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இட வேண்டும்.
அசாடிரிக்டின் பூச்சிக்கொல்லி 1 லிட்டருக்கு 3 மில்லி அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் ஈக்களை வயலில் இருந்து விரட்டலாம்.
குளோர்பைரிபாஸ் 20 EC 1 லிட்டருக்கு மில்லி அளவில் கலந்து நிலத்தில்படுமாறு தெளித்துவிடலாம்.
இவ்வாறு செய்வதனால் வெங்காய ஈக்கள் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.
- எஸ்.சந்திரசேகரன்,
வேளாண் ஆலோசகர்,
செல்: 63746 95399.