கணிசமான வருமானம் தரும் கறிவேப்பிலை சாகுபடி!

மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலை தென்னிந்திய உணவுகளில் பயன் படுத்தப் படும் வாசனைப்பயிர். வீட்டு சாகுபடிக்கான காய்கறிப் பயிர்களில் முக்கிய இடம் பிடிக்கும் மணத்தோடு மருத்துவ குணம் கொண்டே பயிரும் கூட.


தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகம் சாகுபடி செய்யப்படும் பயிராகும். எல்லா வகையான மண்வளிலும் தளதளவென எழுந்து வளர்ந்து மகசூல் கொடுக்கும் பயிர் இது. குறிப்பாக ஊட்டமிக்க செம்மண்வகை சிறந்தது.


நீர்தேங்காத மண்ணில் நன்கு வளரும். இள நரை மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் உணவில் உள்ள நச்சு அம்சங்களை நீக்கும் குணம் போன்றவை கறிவேப்பிலையில் உண்டு.


தந்தை தனக்கு ஒதுக்கியுள்ள 1 ஏக்கர் நிலத்தில் பாலிடெக்னிக் படித்துக் கொண்டே கறிவேப்பிலை சாகுபடியும் செய்து வரும் இளைஞர் டென்னிஸ் நெல்லை மாவட்டம் காவல் கிணற்றைச் சேர்ந்தவர்.


நன்கு உழுத நிலத்தில் ஒரு ஏக்கரில் 3,000 கறிவேப்பிலை செடிகள் நடலாம். விவசாய பண்ணையில் இருந்து கறிவேப்பிலை கன்றுகளை வாங்கி நடுகிறேன். நன்றாக காய்ந்த விதைகளை நிலத்தில் முளைக்க வைத்தும் நடலாம். முளைத்து வேர் விட்டு 5 நாட்கள் அதிகம் பிடிக்கும். எனவே பெரும்பாலும் செடி கன்றுகளை வாங்கி நடுகிறோம்.


சாண உரம் போட்டு நிலத்தை உழுதபின் ஒன்றரைக்கு ஒன்றரை அளவில் குழி எடுத்து, அதில் கறிவேப்பிலை நட்டு, நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர்பாய்ச்ச வேண்டும். சாண உரம் மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்துகிறேன்.


                           


நான்கு மாதத்தில் நான்கடி உயரம் வளரும். முறையான தண்ணீர் விடுதல் செடியின் வளர்ச்சி. மகசூல் அதிகரிப்பு இரண்டுக்கும் உதவும் நான்கே மாதத்தில் முறைப்படி கவனித்தால் இலைகளை பறித்து விற்பனைக்கு அனுப்பிவிடலாம்.


ஆண்டுக்கு 4 தடவை பறிப்பு செய்யலாம். ஒவ்வொரு பறிப்புக்குப் பிறகும் களை எடுத்தல் உரம் போடுதல் போன்றவை முக்கியம். நோய் மேலாண்மையும் மிக முக்கியம்.


ஒரு ஏக்கர் நிலத்தில் கறிவேப்பிலை சாகுபடி செய்யும் போது செடி ஒன்றுக்கு 10 ரூ. வீதம் 3,000 செடிக்கு 30,000 ரூபாய் செலவு ஆகும். பராமரிப்பு செலவு கிட்டத்தட்ட , 30,000 ரூபாய் வரும். பறிப்புக்கு 1500 கிலோ கறி வேப்பிலை கிடைக்கும். கிலோ 15 ரூபாய் விற்பனையில் ரூ.22,500. நான்கு முறை பறிப்பில் 6,000 கிலோ இதன்படி வருமானம் 90,000 ரூபாய் கிடைக்கும். செடி நடுவது ஆரம்ப முதலீட்டுச் செலவுதான் அடுத்தடுத்த ஆண்டு பறிப்புகளில் பறிப்புக்கு 2,000 கிலோ என உயரும்.


செலவு அதிகமானலும் வருமானமும் அதிகரிக்கும். சீசனில் வருமானம் தூக்கலாக இருக்கும். பத்து ஆண்டுகள் பலன் உண்டு. வருமானத்திற்கு பாதுகாப்பான பயிர் என்கிறார் டென்னிஸ். தொடர்புக்கு: 96261 10225.


          65 வகையான மிளகு ரகங்களை பயிரிடும் பிஜூகுமார்!


வெளிநாட்டில் பார்த்து வந்த வேலையை விட்டு, விட்டு தீவிர விவசாயியாக மாறியுள்ளார் பொறியாளரான பிஜூகுமார். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வாகதானம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அவர்.


தனக்குச் சொந்தமான 50 செண்ட் நிலத்தில் பல விதமான பழமரங்களையும் இப்போது பொதுவாக காணக்கிடைக்காத பல ரகங்களை தேடிக்கொண்டு வந்து நட்டார் கால எனப்படும் பாரம்பரியம் சார்ந்த தெய்வீக அமைப்பு ஒன்றை உருவாக்கினார்.


இப்படிப்பட்ட அபூர்வ ரகங்கள் எனப் படுபவை சிவப்பு சந்தன மரம், ரோஸ்வுட், '' இந்தியன் பிளாக் பெர்ரி, பெருங்காய மரம், அன்னாசிப் பூமரம், ஜாதிக்காய் மற்றும் அவகோடா மரங்கள் ஆகியவை ஆகும்.


மேற்கண்ட இதுபோன்ற மரங்களை எல்லாம் அவர் பீச்சியிலுள்ள கேரள வன ஆராய்ச்சி நிலையம், பாலோடிலுள்ள டிராப்பிகல் பொட்டானிகல் கார்டன் மற்றும் ஆராய்ச்சி மையம், மற்றும் பல வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து சேகரித்தார்.


கான்கிரீட் தூண்களை உருவாக்கினார். 15 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட தூண்களை இரண்டடி ஆழத்தில் புதைத்து அவற்றின் மீது கொடிகள் பற்றிச் செல்ல வேண்டும் என்பதற்காக ஐந்து அடி உயரத்திற்கு பச்சை நிற வலைகளைக் கட்டினார்.


கேரளா மற்றும் கர்நாடகத்திலிருந்து பலவிதமான மிளகு ரகங்களை சேகரித்து நட்டார். இயற்கை உரங்களை மட்டுமே தந்தார் மரத்தில் 9 மிளகுக் கன்றுகளை படர விட்டு பரிசோதனை செய்ததில் கான்கிரீட் தூண்களின் மீது படர்ந்த கொடிகளின்  நன்றாகத் தெரிந்தது.


பிஜூ குமார் கருத்துப்படி அனைத்து ரக மிளகுக் கொடிகளையும் பாரம்பரிய விவசாய முறையில் வளர்க்க முடியாது எனப்புரிய வருகிறது. நூறுக்கும் அதிக மிளகு ரகங்கள் இருக்கும்போது இருரகங்களை மட்டுமே விவசாயிகள் பயிரிட்டு வருகின்றார். அனைத்து மிளகு ரகங்களையும் சாகுபடி மற்றும் சுவை காரம் போன்ற வேறு பாடுகளையும் அவர் பதிவு செய்து வைத்துள்ளார்.


ஹைரேஞ்ச் பிளாக் கோல்டு, கரிமுண்டி, கொட்டா, ரெட் வெள்ளாமுண்டி, கூம்புக்கல், விஜய், கரிம்கோட்டா, ஹைரேஞ்ச் பிரியன், கல்லுவல்லி, வல்லநாடன், வயநாடன், குதிரவல்லி, கறிமுண்டா , ஜீரகமுண்டி , சோளாகொடி, நீலன் கரிமுண்டி, பன்னியூர், சக்தி, ஸ்ரீகரா, சுபகரா, தேவம், பௌர்ணமி, நீலமுண்டி, பஞ்சமி அரக்குளமுண்டி, கிரிமுண்டா , உதிரன் கோட்டா , நரயக் கோடி ஐம்பிரியன், மலபார் எக்செல், கொட்டநாடன், கறியில முண்டி, ஜிபாண்முண்டி, முட்டியார் முண்டி கனியக்காடன், கைரலி, தெக்கன், வயநாடன் போல்ட், பிரீதி, சுவர்ணா, சானூர் கொடி, அஸ்வதி, ஆடிபெப்பர், ஆர்யான் முண்டி போன்ற ரகங்களை இவர் வளர்த்து வருகிறார்.


தனது முகநூல் பதிப்பில் குறுமிளகு டைவர் சிட்டி குரூப் என்ற குழுவை இவர் உருவாக் கியுள்ளார். அனுபவத்தை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் இவருடன் தொடர்பு கொள்ள: 85475 94828.


        விவசாயம் பண்ணையல்ல, பயிற்சியகம்:


இயற்கை விவசாயத்தில் ஆர்வமாக ஈடுபடும் ‘கிளாசிக் போலோ' ஆயத்த ஆடை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவராமன் சொல்கிறார்.


விவசாயம் தான் எங்கள் பரம்பரைத் தொழில் ஆனால் ஒரு காலகட்டத்தில் வியாபாரத்திற்கு வந்து விட்டோம். விவசாயத்தில் பெரிய லாபம் இல்லை. செலவு அதிகமாகியபடியே இருந்தது.


அதனால் விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் வியாபாரத்தில் கவனமாக இருந்தோம். அந்த காலத்தில் வனத்துக்குள்ளே திருப்பூர் என்ற எங்கள் அமைப்பிற்காக விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட்டோம். அப்போது விவசாயிகளுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் விவசாயம் ஆதமார்த்தமான விசயம் என்பது புரிந்தது.


'அறப் பொருள் வேளாணகம்' என்ற விவசாயம் பண்ணையைத் தொடங்கினோம். ஆடு, மாடு கோழி, மீன், காய்கறி, மரப்பயிர் என ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையை உருவாக்கினோம்.


இந்த இடத்தை வாங்கும் போதே இதே இடத்தில் ஒரு பள்ளம் இருந்தது. அதைக் கொஞ்சம் ஆழப்படுத்தி கரையில் பிளாஸ்டிக் ஷீட் விரித்தோம்.


போர்வெல் தண்ணீரை அந்த பள்ளத்தில் நிரப்பி மீன் வளர்க்கத் தொடங்கிவிட்டோம். மீன்கள் நன்றாக அதில் வளர்கின்றன. இதில் உள்ள தண்ணீரை எடுத்து பாசனத்திற்குப் பயன்படுத்துகிறோம்.


                           


பக்கத்திலேயே மாட்டுப் பண்ணை இருக்கிறது. 40 மாடுகள் வளர்க்கிறோம். அங்கிருந்து கிடைக்கும் சாணம், கோமியம் போன்றவற்றை எடுத்து விவசாய நிலங்களுக்கு இயற்கை உரமாகப் போடுகிறோம். அப்படியே ஆட்டுப் பண்ணையும் அமைத்து அங்கு கிடைக்கும் உரத்தையும் நிலத்தில் போடுகிறோம்.


நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக 3 ஏக்கரில் காய்கறி போட்டுள்ளோம். பந்தல் காய்களுடன், மலைப் பயிர்களான கேரட், பீட்ரூட் போன்ற வற்றுடன் தக்காளி, மிளகாய், வெண்டை, வெங்காயம் போன்றவற்றையும் பயிரிடுகிறோம்.


ஏற்கனவே இங்கு இயற்கையாக சில மூலிகை வளர்கின்றன. அவற்றுடன் கூடுதலாக சில மூலிகைகளையும் வளர்த்து மூலிகைப் பண்ணை வைத்துள்ளோம்.


'வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை உருவாக்கி எங்களிடம் விளையும் காய்கறிகள், பழங்களை பட்டியலிட்டுள்ளோம். அதை பார்ப்பவர்கள் நேரடியாக பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். உணவு ருசியாக இருக்கிறது என்கின்றனார். காய்கறிகள் விற்பனை மூலமாக நல்ல வருவாய் கிடைக்கிறது.


இயற்கை விசாயிகளுக்கு பயிற்சி அறையை ஏற்படுத்தி பிற விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம். விவசாயத்தை அறியாத சமூகம் வளர்ந்து விட்டது. அதைக் கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வருகிறோம் என்கிறார் கிளாசிக் போலோ ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவராமன். தொடர்புக்கு: 90475 45566.


                                                        - கிராமத்தான்.