ராஜாங்கம்: என்ன ஆறுமுகம் சௌக்கியமா?
ஆறு முகம்: நல்ல சௌக்கியம் தான் அண்ணே . ஆமா, வீட்ல அத்தன மாட்ட வெச்சிக்கிட்டு என்னணே டீ குடிக்க கடைக்கு வந்திருக்கீங்க?
ராஜாங்கம்: எல்லாம் நம்ம டீ கடை முனியாண்டிக்கும் ஒரு வருமானமா இருக்கட்டும்னு தான்.
ஆறுமுகம்: அது சரிண்ணே .
ராஜாங்கம்: ஆமாப்பா, நீ தான் இந்த புதுப் புது தொழில் நுட்பங்கள பத்தி தெரிஞ்சு வெச்சிக்கிறதுல ஆர்வமா இருப்பியே உங்கிட்ட ஒரு வெவரம் கேக்கனும்.
ஆறுமுகம்: சொல்லுங்கண்ணே , எத பத்தி தெரிஞ்சிக்கனும்?
ராஜாங்கம்: இப்போ புதுசா மாடுகளுக்கு பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சினை ஊசி இருக்குன்னு சொல்லுராங்களே, அப்படினா என்னனு கொஞ்சம் சொல்லுப்பா.
ஆறுமுகம்: அதுவா அண்ணே பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட விந்துக்களை வெச்சு பசு மாட்டுக்கு சினை ஊசி போட்டா பிறக்கிற கன்னு 80 லிருந்து 90 சதவீதம் கிடேரி கன்னாதான் இருக்குமாம், காளக்கன்னா இருக்காதாம்.
ராஜாங்கம்: அப்படியா? அப்படி என்ன வினோதம் இருக்குது இந்த புதுரக சினை ஊசில?
ஆறுமுகம்: பெரிய வினோதம் எல்லாம் ஒன்னும் இல்லண்ணே. பொதுவா விந்துக் களில் கிடேரிகன்னு தரக்கூடிய விந்துக்கள், காளக்கன்னு தரக்கூடிய விந்துக்கள்னு இரண் டுமே கலந்து இருக்கும். அதனால கிடேரிகன்னு பிறக்கிறதுக்கும், காளக் கன்னு பிறக்கிறதுக்கும் சரிசமமான வாய்ப்பு இருக்கும். ஆனா இந்த புதுரக சினை ஊசிய தயார் பண்ணும் போது கிடேரிகன்னு தரக் கூடிய விந்துக்களை மட்டும் பிரித்து எடுத்து அத வைத்து மட்டும் தயார் செய்வதால கிடேரிகன்னு மட்டுமே பிறக்குது.
ராஜாங்கம்: அது எப்படிப்பா சாத்திய மாகும்? நம்ம தான் பசு மாட்டுல கிடேரிகன்னு தரக்கூடிய முட்டையையும், காளக்கன்னு தரக்கூடிய முட்டையையும் பிரிக்கவே இல்லையே?
ஆறுமுகம்: பசு மாட்டோட முட்டைகள் எல்லாமே கிடேரிகன்னு தரக்கூடியவை தான் அண்ணே . அதனால பசு மாட்டோட முட்டைகளை பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. காளை மாட்டோட விந்துக்களை மட்டும் பிரிச்சா போதும்.
ராஜாங்கம்: அது அப்படியா அப்போ இந்த புதுரக சினை ஊசியால நமக்கு நல்ல உபயோகம் தான்னு சொல்லு. ஏன்னா மாடுகள சினை பிடிக்க வைக்கிறதே பெரும்பாடா போகுது. சினை பிடிச்சாலும் பிறக்கறதுல பாதி காளக்கன்னா போகுது. காளக்கன்ன நல்ல விலைக்கு விக்கவும் முடியல. வீட்டுல வளத்தாலும் பயன் இல்ல. அதுக்கு கிடேரிகன்னு பிறக்கிற மாதிரி சினை ஊசி போட்டா நமக்கு லாபம் தான.
ஆறுமுகம்: ஆமா அண்ணாச்சி, சரியா சொன்னீங்க. இதனால ரோட்டுல பராமரிக்க ஆள் இல்லாம திரியும் காளைகளின் எண்ணிக்கையும் குறையும்.
ராஜாங்கம்: கிடேரிகன்னு பிறக்கிறது எல்லாம் சரிப்பா இந்த புதுரக சினை ஊசி போடுவதால மாடு சீக்கிரம் சினைதங்குமா? அது பத்தின விவரம் ஏதும் தெரியுமா?
ஆறுமுகம்: அது பத்தி நம்ம மாட்டு டாக்டர் அம்மா கிட்ட விசாரிச்சேனே. அவங்க என்ன சொன்னாங்கனா பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சினை ஊசிக்கு இருக்கும் கருத்தரிக்கும் திறன் சாதாரண சினை ஊசியை விட 20 சதவீதம் குறைவு தான்டை சொன்னாங்க. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் சொல்லுறபடி பாத்தா 100 மாட்டுக்கு சாதாரண சினை ஊசி போட்டு 40 மாடு சினை பிடிச்சதுனா பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சினை ஊசி போட்டா 32 மாடு தான் சினைபிடிக்குமாம்.
ராஜாங்கம்: ஓஹோ, அப்படியா? இதுக்கு காரணம் என்னவாம்?
ஆறுமுகம்: இதுக்கு காரணம் சினை ஊசியில உள்ள விந்துக்களின் குறைந்த எண் ணிக்கை மற்றும் தரம் தான். சினை பிடிக்கத் தேவையான விந்துக்களின் எண்ணிக்கை 1520 மில்லியன். இந்த எண்ணிக்கை சாதாரண சினை ஊசியில சரியா இருக்கு.
ஆனா இந்த புதுரக சினை ஊசியில வெறும் 2 மில்லியன் விந்துக்கள் தான் இருக்காம். அதோட லேசர் கதிர்களை பயன் படுத்தி விந்துக்களை பிரிப்பதால், அவைகளின் தரம் குறையவும் வாய்ப்புள்ளதாம்.
ராஜாங்கம்: ஏன் இந்த புதுரக சினை ஊசியிலும் 15 மில்லியன் விந்துக்கள் இருக்குற மாதா தயார் செய்யக் கூடாது?
ஆறுமுகம்: ஏன்னா விந்துக்களை பிரிக்க உபயோகிக்கிர இயந்திரத்தோட திறன் மிகக் குறைவு. இந்த இயந்திரம் அதில் செலுத்தப்பட்ட விந்துக்களில் 20 லிருந்து 40 சதவீதத்தையே துல்லியமாக பிரித்து தருமாம். மீதியுள்ள 60 லிருந்து 80 சதவீதத்தை வீணாக்கி விடுதாம். அதோடு இந்த இயந்திரம் சிறிதளவு 4 விந்துக்களை பிரிக்கக்கூட அதிக நேரம் செலவிடுமாம்.
ஆனா நம்ம நாட்டுல தான் மாடுகளின் எண்ணிக்கை அதிகமாச்சே இந்த அதிகமான தேவையை பூர்த்தி செய்ய இப்போதைக்கு 2 மில்லியன் விந்துக்களைக் கொண்ட பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சினை ஊசிகள் தயார் செய்யப்படுகின்றன.
இதனால நம்ம கருத்துல கொள்ள வேண்டிய வல்லுனர்களோட அறிவுரை என்னனா பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சினை ஊசியை நல்ல தீவன பராமரிப்பில் வளர்ந்த கிடேரிகளில் பயன்படுத்துவதே லாபமாக இருக்கும்.
ராஜாங்கம்: அப்படினா தலை ஈத்து தாண்டுன மாடுகளில் பயன்படுத்தக் கூடாதா?
ஆறுமுகம்: பயன்படுத்தக் கூடாதுன்னு கட்டுப்பாடு ஏதும் இல்லண்ணே . இந்த புதுரக சினை ஊசில விந்துக்கள் கம்மியா இருக்கிறதுனால தலை ஈத்து தாண்டுன மாடுகளிலோ அல்லது திடம் குறைவாக இருக்கும் மாடுகளிலோ பயன்படுத்தினா சீக்கிரம் சினை பிடிக்கும்னு உறுதியா சொல்லமுடியாது. அப்படி இருக்கும் போது நம்ம பயன்படுத்தினா அது நமக்கு நஷ்டம் தான.
ராஜாங்கம்: ரொம்ப சரியா சொன்னப்பா. சரி இந்த பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சினை ஊசியோட விலை என்ன? எங்க கிடைக்கும்?
ஆறுமுகம்: இப்போதைக்கு இந்த பாலியல் * ரீதியாக பிரிக்கப்பட்ட சினை ஊசியோட விலை 1500 லிருந்து 2000 ரூபாயாக இருக்கு. ஆனா அரசாங்க மானிய விலையில் கூடிய சீக்கிரம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறதாக சொல்லராங்க.
ராஜாங்கம்: அடேங்கப்பா இவ்வளவு விலையா? நம்ம சாதாரண சினை ஊசி மாட்டு ஆஸ்பத்திரியில 10.ரூபாய்க்கு கிடைக்கும் போது இந்த சினை ஊசி மட்டும் ஏன்பா இவ்வளவு விலையா இருக்கு.
ஆறுமுகம்: ஏன்னா இந்த தொழில்நுட்பம் நம்ம நாட்டுல இப்போ ஆரம்ப நிலையில இருக்கு. பெரும்பாலான பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட சினை ஊசி அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அது தான் இந்த அதிகமான விலைக்கு காரணம்.
இருந்தாலும் அரசாங்க உதவியோடு சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி இந்த புதுரக சினை ஊசிய தமிழ்நாடுல அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்வதால் கூடிய சீக்கிரம் மலிவான விலைக்கு கிடைக்கும்னு எதிர்பார்க்கலாம்.
ராஜாங்கம்: அப்போ ரொம்ப நல்லதா போச்சு. சரி ஆறுமுகம் இந்த பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்சினை தனதியினால் கிடேரிக்கன்ன மட்டுமே பிறக்கவைக்க முடியுங்கிற நல்ல தகவலையும் மற்றும் இது வளாந்து வரும் தொழில்நுட்பம் என்பதனால இப்போதைக்கு நல்ல தீவன பராமரிப்பில் வளர்ந்த திடமான கிடேரிகளில் இந்த புதுரக சினை ஊசியை பயன்படுத்துவதே நமக்கு லாபமாக இருக்கும் என்கிற நல்ல அறிவுரையையும் குடுத்ததுக்கு ரொம்ப நன்றிப்பா.
ஆறுமுகம்: இருக்கட்டும் அண்ணாச்சி. நேரம் கிடைக்கும் போது வீட்டு பக்கம் வந்துட்டு போங்க.
ராஜாங்கம்: கண்டிப்பா வரேன் ஆறுமுகம்.
மு.கௌசல்யா தேவி, தீப்தி கப்பலா,
ம. கோகுலவாணி
கால்நடை மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறை,
தேசிய பால்வள ஆராய்ச்சி நிலையம்,
ஹரியானா - 132 001